tamilnadu

img

நாடு முழுவதும் சாத்தான்குளங்கள்

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் உள்ள காவல்நிலையத்தில், ஜெயராஜ் என்பவரும் அவரது மகன் பென்னிக்ஸ் என்ப வரும் மிகவும் கொடூரமான முறையில் அடித்து நொறுக்கப்பட்டு, கொல்லப்பட்ட விவகாரம், நாடு முழுதும் சீற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  இதற்கு இணையாக மேலும் அதிர்ச்சியளிக்கக்கூடிய அம்சம் என்ன வென்றால், இந்தக் கொடூர நிகழ்வுகளை மூடி மறைத்திட காவல்துறை அதிகாரிகள் முயற்சிப்பதும், இந்தக் கொடூ ரக் குற்றச்செயல்களை அடக்கி வாசித்திட தமிழ்நாடு மாநில அரசாங்கம் முயற்சிப்பதும் ஆகும். இதில் சம்பந் தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக கொலைக் குற்றத்தின்கீழ் வழக்குப் பதிவு  செய்திட முதல்நோக்கிலேயே போதுமான ஆதாரங்கள் இருந்ததாலும், புலன் விசாரணையை குற்றப் புலனாய்வுத் துறையின் குற்றப் பிரிவு (சிபி-சிஐடி) மேற்கொள்ளவும்   இதில் தலையிட வேண்டிய அவசியம், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வாயத்திற்கு தேவைப்பட்டது.

சாத்தான்குளத்தில் நடந்த அட்டூழியங்கள் மீது கவனத்தைச் செலுத்துகையில் ஒருசில தினங்களுக்கு முன் இதே காவல் நிலையத்தில் மற்றுமொரு காவல் அடைப்பு மரணத்தையும், பல்வேறு வழக்குகளில் போலீ சார் மேற்கொண்ட சித்ரவதைச் சம்பவங்களும் வெளி வந்திருக்கின்றன. சமூக முடக்கம் அறிவிக்கப்பட்ட பின்னர், காவல்துறையினர் கயவர்களாக மாறி அட்டூழியங்கள் புரிந்துவரும் நிகழ்வுகள் அதிகரித்திருப்பதாக அங்குள்ள மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். உண்மையில், மாநிலம் முழுவதுமே, காவல்துறையினரின் அத்துமீறல்கள் குறித்து முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.

நாடு முழுவதும்...

இவ்வாறான நிகழ்வுகள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல. சமூக முடக்கக் காலத்திலும், கொரோனா வைரஸ் தொற்று காலத்திலும் காவல்துறையினரும், பாது காப்புப் படையினரும், துணை பாதுகாப்புப் படையினரும் கயவர்களாக மாறியிருப்பது, நாடு முழுதுமே விரிவடைந்தி ருக்கிறது.  ஆட்சியாளர்களே, காவல்துறையினர் அக்கிர மங்களில் ஈடுபடுவதற்கு உரிமங்கள் வழங்கி இருக்கின்ற னர். உத்தரப் பிரதேசத்தில், நடந்து சென்று கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்களை அடித்து நொறுக்கி தண்டித்த கொடுமைகளை நாம் பார்த்தோம். சமூக முடக்கத்திற்கு முன், உத்தரப்பிரதேசத்தில், முதல்வர் ஆதித்யநாத் கட்டளைக்கிணங்க, காவல்துறையினர், குடியு ரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் கிளர்ச்சிப் போ ராட்டங்களில் ஈடுபட்டவர்களை நரவேட்டையாடியதையும், அமைதியாகப் போராடியவர்களை தங்கள் இஷ்டத்திற்குக் கைது செய்ததையும் பார்த்தோம். இத்துடன்மட்டும் இவர்கள் நின்றுவிடவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து அபராதங்கள் விதித்ததையும் பார்த்தோம். சமூக முடக்கக் காலத்தில் நடைபெற்ற இத்த கைய அக்கிரமங்களுக்கு எதிராக, அலகாபாத் உயர் நீதிமன்றம் தலையிட்டதன் விளைவாக, அபராதம் வசூலிக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. முஸ்லீம்களும் தங்கள் நிறுவனங்களை மீண்டும் திறப்பதற்கு இருந்த தடை நீக்கப்பட்டது.  

வழக்கமான நிகழ்வுகளாகின்றன...

காவல் அடைப்பு மரணங்கள் பல மாநிலங்களில் வழக்கமான நிகழ்வுகளாக மாறி இருக்கின்றன. உச்ச நீதிமன்றம், காவல் நிலையங்களில் காவல்துறையினரின் அத்துமீறல் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் அவற்றைக் கட்டுப்படுத்திடவும் அளித்துள்ள பரிந்துரைகளை, பல மாநில அரசாங்கங்கள் அமல்படுத்தவில்லை. தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில், உச்சநீதிமன்றம், மாநிலக் காவல் முறையீடுகள் ஆணையம் ஒன்றை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியைத் தலைவராகக் கொண்டு உருவாக்க வேண்டும் (State Police Complaints Commission)  என்று பிறப்பித்திருந்த கட்டளையை, தமிழக அரசோ, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிக்குப் பதிலாக, ஒரு அரசு அதிகாரியை நியமனம் செய்திருப்பதன் மூலம் அரித்து நீர்த்துப்போக வைத்திருக்கிறது.  

இறுதியாக, காவல்துறையினர் கயவர்களாக மாறி மக்க ளைத் தண்டிப்பதிலிருந்து தடுத்திடவும், சட்டத்தைக் காக்க வேண்டியவர்களே அதனை மீறுவதைக் கண்காணித்தி டவும்,  வலுவான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது ஆட்சி யில் உள்ளவர்கள்தான். எனினும், மோடி அரசாங்கத் தின் ஆட்சியில், கடந்த ஆறாண்டுகளில், காவல்துறையி னருக்கும், பாதுகாப்புப் படையினருக்கும், துணைப் பாது காப்புப் படையினருக்கும் அளவிடற்கரிய சலுகைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் எது செய்தாலும் அதனைக் கண்காணித்துத் தடுத்திட எவ்வித ஏற்பாடுகளும் கிடையாது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள அதீதமான சூழ்நிலை, இத்தகைய இவர்க ளின் போக்கை மேலும் வலுப்படுத்தி இருக்கிறது. இதற்கு மிகவும் சரியான உதாரணம், மத்திய உள்துறை அமைச்ச ரின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும், தில்லிக் காவல்துறையினர், வடகிழக்கு தில்லியில் இந்த ஆண்டின் துவக்கத்தில் நடைபெற்ற  முஸ்லீம் மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் சம்பந்தமான வழக்குகளில் எப்படி நடந்துகொண்டு வருகிறார்கள் என்பதைப் பார்த்தாலே தெரிந்துகொள்ள முடியும்.   

கைதுகள் அதிகரிப்பு

சமூக முடக்கத்திற்குப் பின்னர், தங்கள் இஷ்டத்திற்குப் பெரிய அளவில் கைது செய்யும் நடவடிக்கைகள் அதி கரித்திருக்கின்றன. காவல்துறையினரால் பதிவு செய்யப் படும் முதல் தகவல் அறிக்கைகளை பொது வெளியில் வெளி யிடுவதில்லை. அவ்வாறே கைது செய்வோர் குறித்தும் அறி விப்பதில்லை. வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்ற சமயத்தில் அவற்றை முன்னின்று நடத்திய காவல்துறையி னரையும், அவற்றுக்கு உடந்தையாக இருந்த காவல்துறை யினரையும் பாதுகாக்கும் நடவடிக்கைகளும் அப்பட்ட மான முறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, ஃபைசான் என்கிற 23 வயது இளைஞன் வழக்காகும். இவரும் இவருடன் மேலும் நால்வரும் பொது மக்கள் மத்தியிலேயே காவல்துறையினரால் அடித்து நொறுக்கப்பட்டனர். இவர்களை அடித்து நொறுக்கும் காட்சிகள் வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பின்னர் ஃபைசான், தனக்கு ஏற்பட்ட காயங்களின் காரணமாக இறந்துவிட்டார்.  ஆனால், இதுதொடர்பான முதல் தகவல் அறிக்கை, பொய்யான தகவல்களை அளிக்கி றது. அவர் காவல் நிலையத்திற்கு இழுத்துச் செல்லப் பட்டதையோ அங்கே கொடூரமான முறையில் அடித்து நொறுக்கப்பட்டதையோ குறிப்பிடவில்லை.

கடந்த மூன்று மாதங்களில், சட்டவிரோத நடவடிக்கை கள் தடைச் சட்டம் (உபரி) மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டத்தில் உள்ள தேசத் துரோகக் குற்றப்பிரிவின்கீழ் ஏராள மான வழக்குகள் பதியப் பட்டிருக்கின்றன.  மத்தியிலும் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள பாஜக அரசாங்கங்கள், இந்த அரக்கத்தனமான குற்றப்பிரிவுகளின்கீழ் மக்களைக் கைது செய்திடவும், சிறைகளில் அடைத்திடவும் காவல்துறை யினருக்குக் கட்டளைகள் பிறப்பித்திருக்கின்றன. தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ), குற்றப் புலனாய்வுக் கழகம்  (சிபிஐ), அமலாக்கப் பிரிவு போன்ற மத்திய அரசின் புல னாய்வு அமைப்புகள் தாங்களே சட்டம் என்கிற ரீதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தத் திசை வழியில்தான் ஆட்சியாளர்கள் காவல்துறையினருக்கும், பாதுகாப்புப் படையினருக்கும், துணைப் பாதுகாப்புப் படையினருக்கும், கயவர்களாக மாறி அட்டூழியங்கள் புரிந்திட, உரிமங்கள் அளித்திருக்கிறார்கள்.

கைவிடும் கீழமை நீதிமன்றங்கள்

தவறிழைக்கும் காவல்துறையினர் மீது கீழமை நீதித்துறையும் நடவடிக்கை எடுக்க முடியும். எனினும், கீழமை நீதிமன்ற நீதிபதிகளும், நீதித்துறை நடுவர்களும், தங்கள் கடமைகளைச் செய்வதைக் கைவிட்டுவிட்ட நிகழ்வுகள் தற்போது அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.  அவர்கள் அநேகமாக காவல்துறையினரின் வேண்டு கோள்களுக்கெல்லாம் தலையாட்டும் பொம்மைகளாக மாறிவிட்டனர். அவர்கள் நீதிமன்றக் காவலுக்காகக் கொண்டுவரப்படும் நபர்கள் மீது காயங்கள் இருப்பதை யோ, முதல் தகவல் அறிக்கைகளில் வெளிப்படையாகவே முரண்பாடுகள் காணப்பட்டாலும் அவற்றைக் கண்டு கொள்வதோ கிடையாது. வெறுமனே காவல்துறையினரின் கோரிக்கைகள் அனைத்திற்கும் ரப்பர் ஸ்டாம்புகள் போன்று மாறிவிட்டனர். சாத்தான்குளம் வழக்கில் நீதித்துறை நடுவர் நடந்துகொண்டிருக்கும் போக்கைப் பார்க்கும்போது இது நன்கு பிரதிபலிக்கிறது.

இப்போதெல்லாம், நீதித்துறை நடுவர்கள் தங்கள் நீதிமன்றத்தின்முன் குற்றஞ்சாட்டப்பட்டுக் கொண்டு வருபவர்களை, எந்திரகதியாக காவல் அடைப்பு (ரிமாண்ட்) செய்கிறார்கள். தங்கள் மூளையைப் பயன்படுத்துவதே கிடையாது. உதாரணமாக, தேசத் துரோகக் குற்றப் பிரிவு வழக்குகளில், உச்சநீதிமன்றம், கேதார்நாத் சிங் வழக்கில் அளித்துள்ள தீர்வறிக்கையில் கண்டுள்ள வழிகாட்டும் நெறிமுறைகளின்படி, அந்தக் குற்றச்சாட்டு நிலைக் கத்தக்கதாக, இல்லையா என்று பார்ப்பதே இல்லை.  

காவல்துறையினர், பாதுகாப்புப் படையினர் மற்றும் துணைப் பாதுகாப்புப் படையினரின் சட்டவிரோத நடவடிக்கைகள், உயர்நீதித்துறையின் அணுகுமுறையால் சட்டப்பூர்வமாகி இருக்கின்றன. அது, பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களாக இருந்தாலும் சரி, அல்லது சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் அல்லது தேசத்துரோகச் சட்டப்பிரிவுகளில் கைது செய்யப்படுவோர்களாக இருந்தாலும் சரி, உச்சநீதி மன்றம்கூட குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்திடுவதற்காகத் தலையிட மறுக்கிறது.  

ஜம்மு-காஷ்மீரில் குடிமை உரிமைகள் பறிக்கப்பட்ட விவகாரம் இதற்கு மிகவும் சரியான உதாரணமாகும். கொரோனா வைரஸ் தொற்று மற்றும் சமூக முடக்கத்தின் கடந்த மூன்று மாத காலத்தில், என்ன வெளிப்பட்டிருக்கிறது என்றால், இந்தியாவில் எதேச்சாதிகாரத்தின் கட்டமைப்பு இவ்வாறு ஒருமுகப்பட்டிருக்கிறது என்பதேயாகும். காவல்துறையினர் கயவர்களாக மாறி அத்துமீறி நடந்து கொள்வது என்பது இத்தகைய ஒடுக்குமுறை ஆட்சியின் ஒரு பகுதி மட்டுமேயாகும்.  

 ஜூலை 5, 2020 
தமிழில் : ச.வீரமணி




 

;